நடப்பு 2026-27 நிதியாண்டில் கடன் வழங்கும் வளர்ச்சியை 15 முதல் 16 சதவீதமாக உயர்த்த சவுத் இந்தியன் வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது. சில்லறை கடன், விவசாயம் மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன்களுக்கு முன்னுரிமை அளிக்கத் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான மகேஷ் முரளிதர் பாய் கூறியதாவது:வங்கியின் மொத்த கடன் தொகுப்பில் சில்லறை, விவசாயம் மற்றும் சிறு தொழில் கடன்களின் பங்கு 61 சதவீதமாக உள்ளது. இப்பிரிவில் கடன் வளர்ச்சியை 17 முதல் 18 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தங்கக் கடன்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.
செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் வங்கியின் மொத்த கடன் வழங்கல் 18.67 சதவீதம் அதிகரித்து ரூ.1,09,517 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்தில் இது ரூ.92,286 கோடியாக இருந்தது.
வங்கியின் இரண்டாவது காலாண்டு நிகர லாபம் 21 சதவீதம் உயர்ந்து ரூ.426 கோடியாக பதிவாகியுள்ளது.
மத்திய கிழக்கில் நீடிக்கும் போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் பணவீக்க அபாயங்களைக் கருத்தில் கொண்டு கடன் வளர்ச்சி இலக்கு எச்சரிக்கையுடன் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், நடப்பு நிதியாண்டில் ரிசர்வ் வங்கி இரண்டு முறை தலா 0.25 சதவீதம் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புள்ளது, என்றார்.