இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் (WPI), கடந்த செப்டம்பர் மாதத்தில் 11.39 சதவதமாக உயர்ந்துள்ளது. எரிபொருள், உணவு மற்றும் உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவை உயர்வுக்கு முக்கியக் காரணங்களாகும். இதன்மூலம், தொடர்ந்து 3-வது மாதமாக மொத்த விலை பணவீக்கம் 9 சதவீதத்தை தாண்டியுள்ளது.
மேற்காசிய மோதல்கள், உலகளாவிய நிச்சயமற்ற சூழல் பணவீக்க உயர்வுக்கு முக்கியக் காரணிகளாக உள்ளன. ஹோர்முஸ் நீரிணை மற்றும் பாப் அல்-மண்டப் கடல் வழித்தடங்களில் நிலவும் நெருக்கடி, கச்சா எண்ணெய் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில், பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்று, 105 டாலருக்கு மேல் நீடிப்பது செலவின அழுத்தத்தை அதிகரிக்கிறது.ஆகஸ்ட் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 9.92%-ஆக பதிவாகி இருந்த நிலையில், விலை உயர்வு காரணமாக செப்டம்பரில் 1.47% அதிகரித்து, 11.39-% ஆக உயர்ந்துள்ளது. புதிய கணக்கீட்டு முறையின்படி, செப்டம்பர் மாத அடிப்படைப் பணவீக்கம் (Core Inflation) 9.80 சதவீதமாக உள்ளது.
இதில் அதிகபட்சமாக எரிபொருள் மற்றும் மின்சாரப் பிரிவில் பணவீக்கம்,முந்தைய ஆகஸ்ட் மாதத்தில் 22.93% ஆக இருந்த நிலையில், செப்டம்பரில் 25.85%ஆக அதிகரித்துள்ளது.
உணவுப் பொருட்கள் பிரிவில் பணவீக்கம் 7.05%-லிருந்து 8.66% ஆக உயர்ந்துள்ளது. முதன்மை உணவுப் பொருட்கள் பிரிவில் இது 7.76%-லிருந்து 8.67% ஆக அதிகரித்துள்ளது.
உற்பத்திப் பொருட்கள் பிரிவிலும் பணவீக்கம் 8.37%-லிருந்து 9.76% ஆக உயர்ந்துள்ளது. உற்பத்தி தொடர் முழுவதும் மூலப் பொருட்கள் மற்றும் உள்ளீட்டுச் செலவுகள் அதிகரித்து வருவது தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
எரிபொருள் முதல் உற்பத்திப் பொருட்கள் வரை விலை உயர்வு பரவலாகத் தொடர்வதால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது அரசுக்கு முக்கியச் சவாலாக உருவெடுத்துள்ளது.
வித்தியாசம் என்ன?
மொத்த விலை பணவீக்கம் (WPI) என்பது ஒரு பொருளின் ஆரம்பக் கட்ட விலை மாற்றம் என்பதால், இது சில்லறை விலைக்கு முன்னெச்சரிக்கை போல செயல்படும். மொத்த விலை உயர்ந்தால், சில மாதங்களில் சில்லரை விலையும் உயர வாய்ப்புள்ளது.
ஆனால், சில்லறை விலை பணவீக்கம் (CPI) என்பது நுகர்வோராகிய நாம் கையில் இருந்து செலவு செய்யும் பணத்தை நேரடியாகக் குறிப்பதால், நாட்டின் பொருளாதார நிலை மற்றும் மக்களின் வாங்கும் திறனை அறிய இதுவே மிக முக்கியமான அளவுகோலாகும்.