சென்னை:
ஆந்திரப் பிரதேசத்தில் அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு ஆலைகளை அமைக்க ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்ய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும் என அதன் நிர்வாக இயக்குநர் ஆனந்த் அம்பானி தெரிவித்துள்ளார்.ஆந்திரப் பிரதேச மாநிலம், மதனப்பள்ளியில் நடைபெற்ற ராயலசீமா தோட்டக்கலை மையம் மற்றும் இந்திய வேளாண் பள்ளிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குநர் ஆனந்த் அம்பானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய ஆனந்த் அம்பானி கூறியதாவது:
விவசாயக் கழிவுகள், கால்நடைகளின் சாணம், உணவுக் கழிவுகள் உள்ளிட்ட உயிரி மூலப் பொருட்களைப் பயன்படுத்தி மீத்தேன் நிறைந்த எரிவாயுவை உற்பத்தி செய்வதே அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு ஆலைகளின் நோக்கமாகும். இது வழக்கமான இயற்கை எரிவாயுவுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படலாம். இதன்மூலம், விவசாயக் கழிவுகளைப் பயனுள்ள வகையில் பயன்படுத்துவதுடன், கிராமப் புறங்களில் வேலைவாய்ப்புகளையும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியையும் அதிகரிக்க முடியும்.
இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் விவசாயிகள், இனி நாட்டின் எரிசக்தி பாதுகாப்பையும் வலுப்படுத்துவார்கள். இதன்மூலம் எரிசக்தியில் இந்தியா தன்னிறைவு அடைய உதவுவார்கள். ராயலசீமா பகுதியில் தூய்மையான எரிசக்தி மற்றும் மேம்பட்ட உற்பத்தித் துறைகளிலும் முதலீட்டு வாய்ப்புகளை நிறுவனம் ஆராய்ந்து வருகிறது. எரிசக்தித் துறையைத் தாண்டி, இந்திய வேளாண் பள்ளிக்கும் ரிலையன்ஸ் ஆதரவு வழங்க உள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பம், தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் தொழில் நிறுவனங்களுடனான கூட்டாண்மை ஆகியவற்றின் மூலம் இந்த நிறுவனத்துக்கு ஆதரவளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ராயலசீமா தோட்டக்கலை மையத்துக்கு ரூ.40,000 கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது
இவ்வாறு அவர் கூறினார்.