புதுடெல்லி:
நாட்டில் பாதுகாப்பான, எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ற தரமான நெடுஞ்சாலை உள்கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பாக விவாதிக்க, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் சார்பில் நாளை மற்றும் நாளை மறுநாள் (அக். 5, 6) குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டத்தில் உள்ள ஏக்தா நகரில் ‘சிந்தன் ஷிவிர் 2026’ மாநாடு நடைபெறுகிறது.தொடக்க நிகழ்வில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இணையமைச்சர்கள் அஜய் தம்தா, ஹர்ஷ் மல்ஹோத்ரா ஆகியோர் உரையாற்றுகின்றனர். இரண்டு நாள் மாநாட்டில், நெடுஞ்சாலைத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் உள்ள முக்கியச் சவால்களைக் கண்டறிதல், திட்டப் பணிகளை விரைவாக நிறைவேற்றும் புதிய அணுகுமுறைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
இந்த மாநாட்டில், பிரதமரின் கதி சக்தி திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த உள்கட்டமைப்புத் திட்டமிடல், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் பூமி ராஷி இணையதளம், மாதிரி சலுகை ஒப்பந்தங்கள் மற்றும் மதிப்பீடுகள், பாதுகாப்பான நெடுஞ்சாலைகளை வடிவமைத்தல், தர உறுதி மற்றும் திட்டக் கண்காணிப்பு ஆகிய ஐந்து தலைப்புகளில் அமர்வுகள் நடைபெற உள்ளன.
பிரதமரின் கதி சக்தி திட்ட அமர்வில், உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான ஒருங்கிணைந்த திட்டமிடல் குறித்தும், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் பூமி ராஷி அமர்வில் திட்டச் செயலாக்கத்தில் உள்ள சிக்கல்களைக் களைந்து பணிகளை எளிதாக்குவது குறித்தும் விவாதிக்கப்படும். மாதிரி சலுகை ஒப்பந்தங்கள் மற்றும் மதிப்பீடுகள் தொடர்பான அமர்வில் ஒப்பந்தங்கள் மற்றும் அவற்றைச் செயல்படுத்துவது குறித்தும், பாதுகாப்பான நெடுஞ்சாலைகளை வடிவமைக்கும் அமர்வில் சாலைப் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும்.
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தி, பாதுகாப்பான, எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ற தரமான நெடுஞ்சாலை உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான நடைமுறைத் தீர்வுகளை வகுக்கும் நோக்கில் இந்த மாநாடு நடைபெறுகிறது.