பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான அமெரிக்க நன்கொடையாளர்களிடம் இருந்து கரப்பான் ஜனதா கட்சி நிதி பெறுவதாக அமெரிக்கப் பாடகி மேரி மில்பென் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே, இந்தியாவின் உள்விவகாரங்களில் வெளிநாட்டினர் தலையிடக் கூடாது என்று கூறியுள்ளார்.
காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) மற்றும் அதன் நிறுவனர் அபிஜீத் தீப்கே ஆகியோர் மோடிக்கு எதிரான அமெரிக்க நன்கொடையாளர்களிடம் இருந்து நிதி பெறுவதாக அமெரிக்கப் பாடகியும் நடிகையுமான மேரி மில்பென், எக்ஸ் வலைத்தளத்தில் குற்றம்சாட்டினார்.
அமெரிக்காவில் உள்ள சில நன்கொடையாளர்கள், பழமைவாதத் தலைவர்களுக்கு எதிராகச் செயல்படும் நபர்களை ஊக்குவித்து, சம்பந்தப்பட்ட நாடுகளில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில், வெளிநாடுகளில் கல்வி பயின்றவர்களைத் தேர்ந்தெடுத்து நிதியுதவி அளிப்பதாகவும் அவர் கூறினார்.
இந்திய இளைஞர்கள் இதற்கு எதிராகத் திரண்டு, அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
இதற்குப் பதிலளித்த அபிஜீத் தீப்கே, இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட வெளிநாட்டினருக்கு யார் உரிமை கொடுத்தது என்று கேள்வி எழுப்பினார். இந்தியாவின் பிரச்சினைகளைத் தீர்க்க இந்தியர்களுக்குத் தெரியும் என்றும், வெளிநாட்டினரின் தலையீடு தேவையில்லை என்றும் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த மில்பென், மோடிக்கு அமெரிக்காவின் ஆதரவு தேவையில்லை என்றும், இந்திய மக்களின் ஆதரவு அவருக்கு இருப்பதாகவும் கூறினார். மேலும், தீப்கேவின் அரசியல் முயற்சிகள் வெற்றி பெறாவிட்டால், அவருக்கு நிதியளிப்பவர்கள் கைவிட்டுவிடுவார்கள் என்றும் விமர்சித்தார்.
டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் பின்னணியில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தில் முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.