இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் தற்போது 9 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ள நிலையில், அடுத்த 7 முதல் 8 ஆண்டுகளில் இது 40 முதல் 45 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார் .
புதுடெல்லியில் 'ப்ளூம்பெர்க் நியூ எகனாமி ஃபோரம்' சார்பில் “விண்வெளி, இறையாண்மை மற்றும் புதிய பொருளாதாரம்” என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் அமைச்சர் பேசியதாவது: இந்தியா இதுவரை தனது விண்வெளித் தொழில்நுட்பத் திறன்களை உலகிற்கு நிரூபிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தது. ஆனால், தற்போது உலக அளவில் போட்டியிடும் திறன் கொண்ட வர்த்தக ரீதியிலான விண்வெளி நிறுவனங்களை உருவாக்குவதை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீடுகள், நிலையான தேவை, விரைவான ஒழுங்குமுறை அனுமதிகள் மற்றும் நிலையான வணிக மாதிரிகள் ஆகியவை இந்திய நிறுவனங்களை உலகளாவிய சந்தைகளில் விரிவுபடுத்த மிகவும் அவசியமாகும்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் 2019-20-ம் ஆண்டுகளில் இந்தியாவின் விண்வெளித்துறை தனியார் பங்களிப்புக்காகத் திறக்கப்பட்டது. இதன் மூலம் கடந்த 5 முதல் 6 ஆண்டுகளில் மிகச் சிறந்த முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.
விண்வெளித் துறையில் அரசாங்க நிறுவனங்களும் தனியார் துறையினரும் இணைந்து செயல்படுவது சிறந்த முதலீடு மற்றும் நீண்டகால வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. இந்த திறன்களை சர்வதேச அளவில் போட்டியிடும் வகையிலான வணிகமாக மாற்றுவதே தற்போதைய முக்கிய முன்னுரிமையாகும்.
தனியார் விண்வெளி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு, தொடர்ச்சியான தேவையை உருவாக்குவது அவசியம். அரசுத் திட்டங்கள் தனியார் நிறுவனங்களுக்கு அடித்தளமாக அமையும். விண்வெளிப் பொருட்கள் தொடர்பான ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் தொழில்துறைக்கு நடைமுறை நன்மைகளாக மாற வேண்டும்.
நிறுவனங்கள் கோரும் ஏற்றுமதி மற்றும் நிறுவல் அனுமதிகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழங்க வேண்டும். தொடர்ச்சியான தேவை மற்றும் திறமையான நடைமுறைகள் இருக்கும்போது மட்டுமே தொழில்துறை முதலீடுகள் நிலையானதாக மாறும்.
இந்தியாவின் விண்வெளித் திட்டம், விண்ணில் படைக்கும் சாதனைகளுக்காக மட்டுமின்றி, பூமியில் அதன் தொழில்நுட்ப பயன்பாட்டுக்காகவும் தனித்து விளங்குகிறது. செயற்கைக்கோள் தகவல் தொடர்பு மற்றும் புவி கண்காணிப்பு தொழில்நுட்பங்கள் உட்கட்டமைப்பு மேம்பாடு, திட்டக் கண்காணிப்பு, விவசாயம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகியவற்றுக்கு பெரிதும் உதவுகின்றன.
மியான்மர், வங்கதேசம் மற்றும் இலங்கை போன்ற அண்டை நாடுகளுக்கும் பேரிடர் மேலாண்மைக்குத் தேவையான விண்வெளித் தகவல்களை இந்தியா வழங்கி வருகிறது.
தேசிய பாதுகாப்பில் எவ்வித சமரசமும் இன்றி, உள்நாட்டு மற்றும் சர்வதேச கூட்டாண்மையை வலுப்படுத்துவதன் மூலம், உலகளாவிய விண்வெளிப் பொருளாதாரத்தில் இந்தியா மிக முக்கியப் பங்கை வகிக்கும். இவ்வாறு அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.