தரவுகள் கசிவு தொடர்புடைய வாடிக்கையாளர்களின் கணக்குகளில் உள்ள பணம் பாதுகாப்பாக இருப்பதாக நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி உறுதியளித்துள்ளது.
எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் தரவுகள் டார்க் வெப் எனப்படும் இணையத்தின் மறைக்கப்பட்ட பகுதியில் இடம்பெற்றிருப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, வங்கி முதல்கட்ட ஆய்வை மேற்கொண்டது. இதில் சுமார் 3.75 லட்சம் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டதில், 3,897 பதிவுகளில் தனிப்பட்ட முறையில் அடையாளம் காண உதவும் தகவல்கள் இருப்பது கண்டறியப்பட்டதாகப் பங்குச் சந்தைக்கு அளித்த அறிக்கையில் எஸ்பிஐ தெரிவித்திருந்தது.
மேலும், வாடிக்கையாளர்களின் பெயர்கள், பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்கள், பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரிகள், வீட்டு முகவரிகள் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் வங்கியின் முக்கியச் செயல்பாடுகள், நிதிச் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏற்படவில்லை என எஸ்பிஐ தெரிவித்திருந்தது.
இந்நிலையில், எஸ்பிஐ நேற்று தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:
சமீபத்திய தரவுகள் கசிவு சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் வாயிலாகத் தனிப்பட்ட முறையில் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களின் கணக்குகளில் உள்ள இருப்புத் தொகையும் பணமும் பாதுகாப்பாக இருப்பதாக வங்கி மீண்டும் உறுதியளித்துள்ளது.
அதேநேத்தில், டிஜிட்டல் வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தும்போது வாடிக்கையாளர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் (OTP), ரகசிய அடையாள எண் (PIN), இணைய வங்கிக் கடவுச்சொல் ஆகியவற்றை யாரிடமும் பகிரக்கூடாது.
சந்தேகத்துக்குரிய தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்களைக் கவனமாகக் கையாள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.