ரூபாயின் மதிப்பில் அதிகப்படியான ஏற்ற இறக்கத்தைத் தடுக்க ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள் தொடரும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு வெளிப்புறக் காரணங்களே முக்கியக் காரணம் என்றும் அவர் கூறினார்.
புளூம்பெர்க் புதிய பொருளாதார மன்றத்தில் நேற்று பேசிய அவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ரூபாய் மதிப்பு கணிசமாகச் சரிந்துள்ளதாகத் தெரிவித்தார். இருப்பினும், இந்தியாவின் பொருளாதார அடிப்படைகளும், அந்நியச் செலாவணி கையிருப்பும் வலுவாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.
ரூபாயின் மதிப்பை ஒரு குறிப்பிட்ட நிலையில் நிர்ணயிப்பது ரிசர்வ் வங்கியின் நோக்கமல்ல; அதிகப்படியான ஏற்ற இறக்கத்தைத் தடுப்பதே நோக்கம் என்று அவர் விளக்கினார்.
எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கான சிறப்பு டாலர் வசதி, அந்நியச் செலாவணி சார்ந்த ஊக வணிகத்தைக் கட்டுப்படுத்தும் விதிகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதையடுத்து நேற்று முன்தினம் ரூபாய் ஒரு சதவீதம் வலுப்பெற்றது. நேற்று தொடக்க வர்த்தகத்தில் டாலருக்கு நிகராக ரூ.94.96 ஆக உயர்ந்தது.
பத்திரப் பரிவர்த்தனை வரி, நீண்டகால மூலதன ஆதாய வரி சீரமைப்பு குறித்த விவாதங்களை ஆர்வத்துடன் கவனிப்பதாகவும் நிர்மலா தெரிவித்தார்.
பட்ஜெட் தயாரிப்பு தொடங்கியுள்ளதால், எந்த மாற்றங்கள் பரிசீலிக்கப்படும் என்பதை இப்போது தெரிவிக்க இயலாது என்றார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, குறைக்கடத்திகள், மருந்துத் தயாரிப்பு, விமானப் பராமரிப்பு உள்ளிட்ட துறைகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தனியார் முதலீடுகள் வருவதாகவும் அவர் கூறினார். நிதி ஒழுக்கம் முதலீட்டாளர்களுக்குக் கவலையளிக்கும் விஷயமாக இருக்காது என்றும் உறுதியளித்தார்.