சென்னை:
ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்காக ‘அம்ரித் பாரத்’ திட்டத்தை 2022ம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம் ரயில் நிலையங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, பயணிகளுக்கான காத்திருப்பு அறைகள், மின் தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள்,வை-பை வசதி, மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்தளம் ஆகியவை வசதிகளுடன் அமைக்கப்படுகின்றன.இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள 75 ரயில் நிலையங்களை மேம்படுத்த ரூ.3,200 கோடியை ரயில்வே அமைச்சகம் ஒதுக்கீடு செய்தது. இவற்றில் பணிகள் முடிந்த சிதம்பரம், மாம்பலம், ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை உட்பட 20 ரயில் நிலையங்கள் பிரதமர் மோடியால் திறக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. இந்நிலையில், பழனி, வேலூர் கன்டோன்மென்ட், அம்பாசமுத்திரம், பரமக்குடி, நாமக்கல் என 5 ரயில் நிலையங்களை ரூ.72 கோடி செலவில் மேம்படுத்தும் பணிகள் சமீபத்தில் முடிந்தன.
மெட்ரோ ரயில் சேவையை தொடங்கிவைக்க வரும் 11-ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார். அதே விழாவில் 5 அம்ரித் பாரத் ரயில் நிலையங்களையும் பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கிவைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை தெற்கு ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது.
மனம் கவரும் முகப்புகள்
பழனி: ஆண்டுதோறும் 17.8 லட்சம் பயணிகள் பயன்படுத்தும் பழனி ரயில் நிலையத்தின் முகப்பு, முருகருடன் வேலும், மயிலும் இணைந்திருப்பதுபோல வடிவமைக்கப்பட்டுள்ளது.
வேலூர் கன்டோன்மென்ட்: சுமார் 5.8 லட்சம் பேர் வந்து செல்லும் வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தின் முகப்பு வேலூர் கோட்டையைப் பிரதிபலிக்கும் வகையில் உள்ளது.
அம்பாசமுத்திரம்: ஆண்டுக்கு 18.20 லட்சம் பேர் வந்து செல்லும் அம்பாசமுத்திரம் ரயில் நிலையத்தின் முகப்பு தேரிக்காட்டின் சிவப்பு நிறத்தையும், தமிழகத்தின் கட்டிடக் கலையை எடுத்துக் காட்டும் வகையில் சுடுமண் சிற்பங்களுடன் மாற்றப்பட்டுள்ளது.
பரமக்குடி: சுமார் 6.3 லட்சம் பயணிகள் வந்து செல்லும் பரமக்குடி ரயில் நிலையத்தின் முகப்பு தமிழகத்தின் கட்டிடக் கலையை, நவீனத்தை எடுத்துக் காட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளளது.
நாமக்கல்: ஆண்டுக்கு சுமார் 6.3 ரயில் பயணிகள் வந்து செல்லும் நாமக்கல் ரயில் நிலையத்தின் முகப்பு நவீனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.