அமெரிக்காவின் ஜார்ஜியாவில் ரோலர் கோஸ்டரிலிருந்து தூக்கி வீசப்பட்டு 42 வயது நபர் உயிரிழந்த சம்பவம், பொழுதுபோக்கு சவாரிகளின் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளது.
சிக்ஸ் ஃபிளாக்ஸ் பூங்காவின் ‘கோலியாத்’ சவாரியில் கடந்த 12-ம் தேதி பயணித்த ஹசன் ஜிஹாத் இப்ன் கரீம், இருக்கையிலிருந்து வெளியே வீசப்பட்டு உயிரிழந்தார்.இதையடுத்து, முன்னெச்சரிக்கையாக வட அமெரிக்காவில் இதேபோன்ற ஒன்பது சவாரிகளை சிக்ஸ் ஃபிளாக்ஸ் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மாநில அதிகாரிகளும், ரோலர் கோஸ்டர் விளையாட்டு இயந்திர தயாரிப்பு நிறுவனமும் விசாரணை நடத்துகின்றனர். விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகவில்லை.
அமெரிக்காவில் இத்தகைய சவாரிகளுக்கான பாதுகாப்பு விதிகள் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகின்றன. ரோலர் கோஸ்டர் உயிரிழப்புகள் மிகவும் அரிதானவை என்பது குறிப்பிடத்தக்கது.