பொருளாதார ஏற்ற இறக்கங்களைக் கட்டுப்படுத்துவதற்கான கொள்கைகளை வகுக்க உதவும் ஆய்வுக்காக, அமெரிக்கப் பொருளாதார வல்லுநர்கள் ராபர்ட் இ.ஹால், மைக்கேல் உட்ஃபோர்டு ஆகியோருக்கு 2026-ம் ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பங்களின் செலவுகள் சேமிப்புகள், நிறுவனங்களின் முதலீடு, விலை நிர்ணயம் உள்ளிட்டவை எவ்வாறு பொருளாதாரத்தில் தாக்கத்தை உண்டாக்குகின்றனர் என்று இருவரும் ஆய்வு மேற்கொண்டனர். இதற்காக இவ்விருவருக்கும் நடப்பாண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமி வெளியிட்ட அறிக்கையில், "பொருளாதார ஏற்ற இறக்கங்களைக் கட்டுப்படுத்த உதவும் புதிய பொருளாதார மாதிரிகளை இருவரும் உருவாக்கியுள்ளனர். இந்த மாதிரிகளின் அடிப்படையில் நிதிக் கொள்கை மற்றும் பணவியல் கொள்கை நடவடிக்கைகளை உரிய நேரத்தில் மேற்கொள்வதன் மூலம், பொருளாதார ஏற்ற இறக்கங்களைக் குறைக்க முடியும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விருது அறிவிக்கப்பட்டுள்ள ராபர்ட் இ. ஹால் 1943-ல் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பாலோ ஆல்டோவில் பிறந்தார். இவர் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
மற்றொருவரான மைக்கேல் உட்ஃபோர்ட் 1955-ல் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள சிக்கோபீ நகரில் பிறந்தார். நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அரசியல் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.