சீனா – வடகொரியா இடையே வர்த்தகத்தை அதிகரிக்கும் நோக்கில் கட்டப்பட்ட யாலு நதிப் பாலம், 12 ஆண்டுகள் தாமதத்துக்குப் பிறகு திறக்கப்பட உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவை வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
சீனாவின் டான்டோங் நகரையும், வடகொரியாவின் சினுயிஜு நகரையும் இணைக்கும் இந்தப் பாலத்தின் நீளம் சுமார் 3 கிலோமீட்டர். நான்கு வழிகளைக் கொண்ட இந்தச் சாலைப் பாலத்தின் கட்டுமானப் பணிகள் 2011-ம் ஆண்டு தொடங்கி, 2014-ம் ஆண்டில் முடிவடைந்தன.இருப்பினும், வடகொரியப் பகுதியில் அணுகு சாலைகள், சுங்க மற்றும் குடியேற்றப் பரிசோதனை வசதிகள் முழுமையாக அமைக்கப்படாததால், பாலம் பயன்பாட்டுக்கு வராமல் இருந்தது.
தற்போது இரு நாடுகளிலும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, அக்டோபர் 15-ம் தேதி பாலத்தைத் திறப்பதற்கான நிகழ்ச்சி நடைபெறும் என்று சீனாவின் அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்துள்ளது.
சீனா, வடகொரியாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாகவும், முக்கிய நட்பு நாடாகவும் உள்ளது. கடந்த ஆண்டு சீனாவிலிருந்து வடகொரியாவுக்கான ஏற்றுமதி 2.3 பில்லியன் டாலராக உயர்ந்தது. இது முந்தைய ஆண்டைவிட 25 சதவீதம் அதிகமாகும்.
தற்போது இரு நாடுகளையும் இணைக்கும் பழைய நட்புப் பாலத்தில் ரயில் மற்றும் வாகனப் போக்குவரத்து நடைபெறுகிறது. ஒரே நேரத்தில் ஒரு திசையில் மட்டுமே வாகனங்கள் செல்ல முடிவதால், புதிய பாலம் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து சரக்குப் பரிமாற்றத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.